இலங்கைக்கு எதிராக இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இன்று அறிவித்தார்கள். அபினவ் முகுந்துக்கு பதில் இன்னொரு தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரை இந்திய அணியில் சேர்த்துள்ளார்கள்.
இலங்கைக்கு சென்று இந்திய அணி விளையாடிய போது இந்திய அணியில் முரளி விஜய் இருந்தார். ஆனால், அவர் அந்த தொடரில் இருந்து மணிக்கட்டு காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக இடது கை வீரர் ஷிகர் தவான் அணியில் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய தொடரின் போது முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தார். இதன் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் 10வது சீசனில் அவர் விளையாடவில்லை.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடி கொண்டிருக்கும் போது அவரின் கணுக்கால் திரும்பியதால், பாதியிலேயே அவர் மைதானத்தை விட்டு சென்றார். இதனால், திரிபுராவுக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நவம்பர் 16ஆம் தேதி தான் தொடங்கவுள்ளது, இதனால் அவரின் உடல்நலத்தை சரியாக்க அவருக்கு போதிய நேரம் உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடரின் போது முரளி விஜய்க்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்தார் அபினவ் முகுந்த். அவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 81 ரன் அடித்தார் முகுந்த், ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஞ்சி கோப்பையில் மூன்று இன்னிங்சில் 2 அரைசதம் அடித்துள்ளார் முகுந்த், ஆனால் விஜய் இருப்பதால் அவரை அணியில் சேர்க்கவில்லை.
ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்க திணறி வரும் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்கள். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவுக்கும் இடம் கொடுத்துள்ளார்கள். ஜடேஜாவுக்கு பதிலாக உள்ளே வந்த அக்சார் பட்டேலை நீக்கி விட்டார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்கள். இந்த அணியின் வேகப்பந்து வீச்சாளராக களமிறங்க புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரும் உள்ளார்கள்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், செதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹர்டிக் பாண்டியா, வ்ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.