எனக்கு பிடித்த ஐபிஎல் டீம் இதுதான்.. அது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இல்லை – முத்தையா முரளிதரன் ஓபன் டாக்!
நான் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியதில் எனக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி இதுதான் என மனம் திறந்து பேசியுள்ளார் இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மூன்று சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். இவர் 4.5 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் அப்போதைய ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அதன்பிறகு 2011ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். பின்னர் அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்காக ஆடி, 2014ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனக்கு மிகவும் பிடித்த அணி எது என முத்தையா முரளிதரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
முத்தையா முரளிதரன் அளித்த பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மூன்று ஆண்டுகள் நான் விளையாடி இருக்கிறேன். லங்கசயர் அணியுடன் 6, 7 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். இன்னும் சில அணிகளுடனும் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் மிகச் சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான் பார்க்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு அணியும் கூட.” என்றார்.
“நான் ஐபிஎல் தொடரில் ஆடினால், சென்னை அணிக்காக மட்டுமே ஆடவேண்டும் என வேண்டிக்கொண்டேன். குறிப்பாக, சென்னை வீரர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுடன் நன்கு பேசி பழகமுடியும் என நினைத்ததே சென்னைக்கு வர காரணம்.” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் இதுவரை 40 போட்டிகளில் ஆடியுள்ள முத்தையா முரளிதரன் 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ஆம் ஆண்டு சென்னை அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கும், 2010 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்.