இளம் வயதில் ஹாட்ரிக்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தான் வீரர்
16 வயதே நிரம்பிய இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை புரிந்து, இளம் வயதிலேயே டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை புரிந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முகமட் சமி 2002-ல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய பிறகு தற்போது நசீம் ஷா பாகிஸ்தானுக்காக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
ராவல்பிண்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளன்று மாலை இந்தச் சாதனையை நிகழ்த்தினார் நசீம் ஷா.

இதே சாதனையை வங்கதேச ஸ்பின்னர் அலோக் கபாலி 2003-ல் பெஷாவரில் பாகிஸ்தானுக்கு எதிராக 19 வயதில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சாதனை புரிந்ததுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிய நசீம் ஷா எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தில் சோபிக்காமல் போனார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்குச் சுருண்டது, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 445 ரன்கள் குவித்தது. 212 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிவந்த வங்க தேச அணி 124/2 என்று ஆடிவந்த போது இன்னிங்சின் 41வது ஓவரை வீச வந்தார் நசீம் ஷா, இதில் 4வது பந்தில் 38 ரன்கள் எடுத்த நஜ்முல் ஹுசைன் ஷாண்டோவை எல்.பி.செய்தார்.

5வது பந்தை வைடு ஆஃப் த கிரீசிலிருந்து படுவேகமாக உள்ளே செலுத்த தைஜுல் இஸ்லாம் கால்காப்பில் வாங்கி பிளம்ப் எல்.பி.ஆகி டக்கில் வெளியேறினார்.
ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுப்பதற்காக இறங்கிய அனுபவ வீரர் மஹ்முதுல்லாவும் ஃபுல் லெந்த் பந்தை ட்ரைவ் ஆட முடிவெடுத்து எட்ஜ் செய்து வெளியேறினார். 4,5,6ம் பந்துகளில் வரிசையாக விக்கெட்டைச் சாய்த்து ஹாட்ரிக் உலக சாதனை புரிந்தார் நசீம் ஷா.
இவருக்கு இப்போதைய வயது 16 ஆண்டுகள் 279 நாட்களே ஆகின்றன, இவர் பாகிஸ்தான் 9வது மிக இளம் அறிமுக வீரர் ஆவார். முன்பு ஹசன் ராஜா என்பவர் 1996-ல் 14 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அறிமுகமானதே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது.
வங்கதேச அணி 126/6 என்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.