இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் விளையாடியது ஆச்சரியமாக உள்ளது; அணில் கும்ப்ளே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கியது ஆச்சர்யமாக உள்ளது என முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் தோல்வி அடைந்தது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இல்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோனை அருமையாக பயன்படுத்தியது. அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அவர் உதவினார்.
இந்திய அணியில் ஏன் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இடம்பெறவில்லை என பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில், “இந்திய அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை. ஏனென்றால் அனைத்து விதமான சூழலிலும் பந்துவீச தயாராக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கி வெற்றி கண்டது” என்று தெரிவித்தார்.
ஜடேஜா குறித்து அவர் பேசுகையில், “4 வேகப்பந்து வீச்சாளர்களை இறக்கியதால், சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடியவில்லை. ஜடேஜா காயம் அடைந்திருப்பதாக கூறினார்கள். பெர்த் டெஸ்டில் அவர் சில நாட்கள் பீல்டிங் செய்தார். அதனால், அவரது காயம் அதிகரித்திருக்கலாம் என உறுதியாக சொல்ல முடியாது” என்று கூறினார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.