வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முகமது ஷமி எடுக்கப்படவில்லை. இதற்கு காரணம், ஷமி தன்னை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம். ஷமி ஏன் அவ்வாறு கேட்டுக்கொண்டார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணி முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை பெரிதளவில் போராடாமல் ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது இந்திய அணி.
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்ற இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாததால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முன்னணி பேட்ஸ்மேன்கள் புஜாரா, விராட் கோலி ஆகியோர் மீதும், ரோகித் சர்மாவின் பேட்டிங் மீதும் பல கருத்துக்கள் பேசப்பட்டன.
இருப்பினும் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு, ஃபாரம் மீது தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. டெஸ்ட் அணிக்கு தொடர்ந்து அவரே கேப்டனாக இருப்பார் என தெரிவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரை கேப்டனாக நியமித்திருக்கிறது பிசிசிஐ.
வருகிற ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இரண்டிலும் ருத்துராஜ் கெய்க்வாட் எடுக்கப்பட்டிருக்கிறார். யஷஷ்வி ஜெய்ஸ்வால்-க்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய மூத்த வீரர்கள் எடுக்கப்படவில்லை.
புஜாராவின் நீக்கம் தற்காலிகமானது என்று தெளிவாக கூறப்பட்டுவிட்டது. உமேஷ் யாதவிற்கு காலில் காயம் இருப்பதால் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. முகமது ஷமி நீக்கம் ஏன் என தெரியாமல் இருந்தது.
இப்படியொரு சூழலில், முகமது ஷமி எடுக்கப்படாததற்கு பிசிசிஐ காரணம் அல்ல, ஷமி தான் காரணம் என்று தற்போது தகவல்கள் வெளிவந்திருக்கிறது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில்,
“முகமது ஷமி இடைவிடாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் என வரிசையாக விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவுற்றபின் இந்திய அணி ஆசியகோப்பை மற்றும் அதைத்தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பை என இடைவிடாமல் விளையாடுகிறது. அதற்குள் காயம் ஏற்பட்டு விடலாம். ஆகையால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு கொடுக்கும்படி முகமது ஷமி தாமாக கேட்டுக்கொண்டார்.
சொந்த காரணங்களுக்காக இல்லாமல் நன்றாக செயல்படவேண்டும் என்றும், அணியின் மீது அதீத கொண்டும் கேட்டதால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ விருப்ப ஓய்வு கொடுத்திருக்கிறது”.