நியூசிலாந்து-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சரை பார்த்து நியூசிலாந்து ரசிகர் ஒருவர் நிறத்தை குறிப்பிட்து இனவெறியுடன் தகாத வார்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
A bit disturbing hearing racial insults today whilst battling to help save my team , the crowd was been amazing this week except for that one guy , @TheBarmyArmy was good as usual also
— Jofra Archer (@JofraArcher) November 25, 2019
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஆர்ச்சர், “எனது அணியை காப்பாற்ற பேட்டிங் செய்து போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இன ரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன். அந்த ஒருவரை தவிர ரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர். வழக்கம் போல் இங்கிலாந்து ரசிகர்கள் நல்ல ஊக்கம் அளித்தனர்” என்றார்.
இச்சம்பவம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“முதல் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் வார்த்தையால் அவமரியாதை செய்ததாக எழுந்துள்ள புகார் எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இன ரீதியான அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக ஜோப்ரா ஆர்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோப்ரா ஆர்சரை நாளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோருவோம்” என தெரிவித்தது.
இந்த குற்றத்தை செய்த நபர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால், அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என குறிப்பிட்டது.