இவனுகளுக்கு 100 ரன்னே அதிகம் போல… வெறும் 76 ரன்களில் சுருண்ட இலங்கை; 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஆக்லாந்த் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் 51 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 49 ரன்களும், டேரியல் மிட்செல் 47 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், நியூசிலாந்து அணி 274 ரன்கள் குவித்தது.

இதன்பின் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பதும் நிஷான்கா 9 ரன்னிலும், பெர்னாண்டோ 4 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வரிசையாக வெளியேறினர்.
மேத்யூஸ் (18), கருணாரத்னே (11) மற்றும் லஹிரு குமாரா (10) ஆகிய மூவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 19.5 ஓவரில் வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரி சிப்லே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் டேரியல் மிட்செல் மற்றும் திக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.