அவசரப்பட வேண்டாம்… சூர்யகுமார் யாதவ இந்த இடத்துல களமிறக்குங்க… இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த வாசிம் ஜாபர்
விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவை 6வது இடத்தில் களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 27ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர், அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவை 6வது இடத்தில் களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் விசயத்தில் இந்திய அணி அவசரப்பட கூடாது என்பதே எனது கருத்து. என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் 5வது அல்லது 6வது இடத்தில் களமிறக்கப்படுவதே சரியானதாக இருக்கும். குறிப்பாக முதலில் அவருக்கு 6வது இடத்திலேயே வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும். 6வது இடம் அவர் சரியாக அமைந்துவிட்டால், அடுத்ததாக 5வது இடத்தில் களமிறக்கி அவரை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் 3 அல்லது 4வது இடம் சூர்யகுமார் யாதவிற்கு சரிப்பட்டு வராது” என்று தெரிவித்தார்.