கடைசி ஓவர் கடைசி பந்தில் நோ-பால் வீசி ஆட்டத்தை மொத்தமாக ஹைதராபாத் பக்கம் மாற்றியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சந்தீப் சர்மா. ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.
ஓப்பனிங் வீரர்கள் யஷஷ்வி ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள், ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அன்மோல்பிரீத் சிங் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் ஓபனிங் செய்தனர். 25 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அன்மோல்பிரீத் சிங் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 55 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துவிட்டுச் சென்றார்.
அபிஷேக் சர்மா-ராகுல் திரிப்பாதி இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 65 ரன்கள் சேர்த்தனர். ராகுல் திரிப்பாதி 29 பந்துகளுக்கு 47 ரன்கள் அடித்திருந்தபோது தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார்.
ஹென்ரிச் கிளாசன் தனது பங்கிற்கு 12 பந்துகள் மட்டுமே பிடித்து 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் இப்போட்டியில் பெரிதளவில் சோபிக்கவில்லை. வெறும் ஆறு ரன்கள் மட்டுமே அடித்து முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்ததாக உள்ளே வந்த கிளென் பிலிப்ஸ் வெறும் ஏழு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்கள் விளாசி ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பினார்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றிபெற 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் கிட்டத்தட்ட ஆட்டத்தை கடைசி பந்துவரை எடுத்துச் சென்றார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்று இருந்தபோது, சந்தீப் சர்மா தவறுதலாக நோ-பால் வீசினார்.
நோ-பால் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கடைசி பந்தில் அப்துல் சமாத் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். முக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.