தனக்கும் தோனிக்கும் உள்ள உறவு யாராலும் பிரிக்க இயலாதது. தற்போது வரை நிறைய பேர் எங்களுக்கு சண்டை மூட்டிவிட முயற்சி செய்தார்கள் ஆனால், அவற்றை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் எப்போதும் மாறாதது. இன்னும் எனது முதல் மூன்று ஆண்டு கேப்டன் அனுபவத்தில் தான் இருக்கிறேன். தோனி என் அணியில் இருப்பது எனக்கு பெரிதும் உதவுகிறது, என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.
கௌரவ் கபூருடனான் ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ சாட் நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:
எனக்கும் தோனிக்கும் மோதல் நிலவுவதாக நிறைய பேர் கதைகட்டி வருகின்றனர். சிறப்பு என்னவெனில் அத்தகைய கதைகளையோ செய்திகளையோ நானும் படிப்பதில்லை, அவரும் படிப்பதில்லை. எங்களை சேர்ந்து பார்க்கும் யாவரும் இவர்களுக்குள்ளாக மோதலா என்றே ஆச்சரியப்படுவார்கள். இத்தகைய செய்திகள் குறித்து நாங்கள் எங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்வோம்.
மேத்யூ ஹெய்டன் ஒருமுறை தோனி 7 வயது சிறுவர் போல் ஒரு விஷயத்தை தமாஷாகப் பார்த்துக் குதூகலம் அடையக்கூடியவர் என்றார் ஹெய்டன் கூறியது இலக்கு தவறாத கருத்து. தோனியிடம் குழந்தைத் தனமான ஒரு உற்சாகம் பீறிடுவதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தனக்கு ஆர்வமூட்டும் புதிதான் விஷயங்களை அவர் எப்போதும் நாடுவார்.
ஒருமுறை அண்டர்-17 நாட்களில் நடந்த ஒன்றை தோனியிடம் கூறினேன் அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார், அதுவும் போட்டியின் நடுவில்…பவுலர் ஒருவரிடம் நான் பந்தைக் கொடுத்து எந்தப்பக்கத்திலிருந்து வீசுகிறாய் என்று கேட்பதற்கு பதில் கஹான் சே என்றேன் அதற்கு அந்தப் பவுலர் நஜாப்கர் என்றார். எந்த முனை என்று கேட்டதற்கு தான் வசிக்கும் இடத்தை அவர் கூறியதாக தோனியிடம் கூறியதற்கு அவர் சிரி சிரி என்று சிரித்தார்.
திட்டமிடுதல், ஆட்டத்தில் என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என்பது பற்றிய கூர்மையான கிரிக்கெட் அறிவில் தோனிக்கு விஞ்சி நான் யாரையும் கண்டதில்லை. 10 முறைகளில் நான் 8-9 முறைகள் அவரது ஆலோசனையை நாடிய போதெல்லாம் அனைத்தும் சாதகமாகவே முடிந்துள்ளன. எங்கள் நட்பு காலத்தில் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
தோனிக்கும் எனக்கும் கிரீசில் நல்ல புரிதல் உண்டு, அவர் 2 ரன்கள் என்றால் நான் கண்ணை மூடிக்கொண்டு 2 ரன்களுக்கு ஓடி விடுவேன், காரணம் அவரது கணிப்பு தவறாது.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
தோனி அணியில் இருப்பதை கோலி விரும்புகிறார் என முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருவது தற்போது நிரூபனமாகியுள்ளது. மேலும் அவரை வெருமனே அணியில் கோலி வைத்திருக்கவில்லை, அவரது ஃபார்மும் சரியாகத்தான் இருக்கிறது. மேலும், இரண்டவாது டி20 (நவ்.4) போட்டியில் தோனி ஆடிய மெதுவான ஆட்டம் பல்வேறு தரப்பினரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
சில முன்னாள் வீரர்கள் அவரை உடண்டியாக ஓய்வு பெறச் சொல்கிறார்கள் மேலும் பல வீரர்கள் அவருடைய நேரம் அவருக்குத் தெரியும் எனவும் கூறி வருகிறார்கள்.