தமிழ்நாடு சார்பில் ஐபிஎல்லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்களே இல்லாததால், உடனடியாக இந்த அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 13 சீசன்களில் 9 முறை இறுதிப்போட்டிக்கும் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. அதில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது.
அதிக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணியாகவும், அதிக முறை பைனலில் விளையாடிய அணியாகவும் சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“தமிழகத்தில் பல திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர். இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எவரும் எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கான ஐபிஎல் அணி என்கிற ரீதியில் வெளியில் காட்டிக்கொண்டு வர்த்தகத்தில் பல கோடி ரூபாய்களில் லாபம் ஈட்டுகின்றது. இதனால் தமிழர்களுக்கு என்ன பலன்.
தமிழக வீரர்களே இல்லாமல் தமிழ்நாட்டுக்கான அணி என்று சொல்லிக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.” இவ்வாறாக சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசினார்.
மேலும் சட்டப்பேரவை விட்டு வெளியே வந்த பிறகு பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல திறமையான வீரர்கள் இருந்தும் எவருக்கும் வாய்ப்பு கொடுக்காத அணியை தமிழகத்திற்குள் இனியும் அனுமதிக்க முடியாது. தமிழகத்திற்கான அணி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் இருந்து ஒருவரையும் எடுக்கவில்லை என்றால் கேட்பதற்கு யாரும் இல்லை என்பது போல சிஎஸ்கே அணி நிர்வாகம் நடந்து கொள்கிறார்களா? எங்களது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை போராடுவோம்.” என்றும் பேசினார்.
இதற்கிடையில் இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4ஆவது லீக் போட்டியை வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.