முட்டாபசங்களா இப்படியா செய்வீங்க..? கவுதம் கம்பீரே கடுப்பாகியுள்ளார்
கொரோனா ஏற்படுத்திய இருளுக்கு எதிராக நாட்டு மக்களை நம்பிக்கை ஒளியேற்ற கோரிய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மக்கள் நம்பிக்கை ஒளியேற்றிய நிலையில் பட்டாசு வெடித்தவர்களை கம்பீர் சாடியுள்ளார்.
கொரோனாவால் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற வளர்ந்த நாடுகளும்கூட கடும் பாதிப்பை சந்தித்துவருகின்றன. மனித குலத்திற்கே சவாலாக திகழும் கொரோனாவுக்கு எதிராக நாடே ஒருங்கிணைந்து போர் தொடுத்துவருகிறது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் சமூக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியதுடன் நாடே ஸ்தம்பித்துள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து அதை விரட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மக்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஏற்படுத்திய இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றும் விதமாக நாட்டு மக்கள், ஏப்ரல் 5ம் தேதி(நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறும், வீட்டிற்கு வெளியே வந்து டார்ச்லைட் அடிக்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும், ஒற்றுமையுடன் செயல்பட்டு கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டிக்கிறோம் என்று நம்பிக்கை ஒளியேற்றி பறைசாற்றினர். ஆனால் அப்போது நாட்டின் பல பகுதிகளிலும் பலர் சரியான புரிதலின்றி பட்டாசு வெடித்தனர்.
சிலர் செய்த இந்த தவறு, அனைத்து தரப்புக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியது. கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகத்தான் பட்டாசு வெடிக்கப்படும். அப்படியிருக்கையில், நாடே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், சரியான புரிதலின்றி சிலர் பட்டாசு வெடித்தனர்.
INDIA, STAY INSIDE!
We are still in the middle of a fight
Not an occasion to burst crackers ! #IndiaFightsCorona— Gautam Gambhir (@GautamGambhir) April 5, 2020
அதனால் கடும் அதிருப்தியடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் பாதியைத்தான் கடந்திருக்கிறோம். போரின் நடுவில் இருக்கிறோம். பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கான தருணம் அல்ல இது.. என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு தீர்வு காணும் இடத்தில் உள்ள நாம், அதற்கு முன், இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு முடிவுகாண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஹர்பஜன் சிங் கோபமாக டுவீட் செய்துள்ளார்.