பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கே.எஸ் பாரத்... அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா..? மவுனம் கலைத்த ராகுல் டிராவிட் !! 1
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கே.எஸ் பாரத்… அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா..? மவுனம் கலைத்த ராகுல் டிராவிட்

இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எஸ் பாரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டி 15ம் தேதி துவங்க உள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடர் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்களுக்கு பதிலளித்த ராகுல் டிராவிட், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எஸ் பாரத்திற்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “ஏமாற்றம் என்பது மிகப்பெரிய வார்த்தை, எனவே கே.எஸ் பாரத் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் என நான் கூற மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பாரத்தை போன்ற இளம் வீரர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளராக நானும் எனது வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறேன். இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே விருப்பம்.  கே.எஸ் பாரத்தின் விக்கெட் கீப்பங்கை யாருமே குறை சொல்ல முடியாது. அவர் விக்கெட் கீப்பிங்கில் மிக மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கிலும் அவர் தன்னை முன்னேற்றி கொள்வார் என முழுமையாக நம்புகிறேன். எதுவுமே கே.எஸ் பாரத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைத்துவிடவில்லை. முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலமே அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான போட்டியிலும் பாரத் சதம் அடித்தார், இதன் மூலமே அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டது, கடந்த இரண்டு போட்டிகளில் அவர் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை தான், ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் பாரத் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார் என முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *