பெங்களூர் அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இனி இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
கிரிஸ் கெய்ல், விராட் கோலி, டிவில்லியர்ஸ் என கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரர்கள் பலர் பெங்களூர் அணிக்காக விளையாடி இருந்தாலும், பெங்களூர் அணியால் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியவில்லை.
பெங்களூர் அணியை கடந்த பல வருடங்களாக வழிநடத்தி வந்த விராட் கோலி, இந்த வருட தொடருக்கு முன் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், டூபிளசிஸ் நடப்பு ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
டூபிளசிஸ் தலைமையிலான தற்போதைய பெங்களூர் அணி, நடப்பு தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் அடுத்த போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்திப்பதை வழக்கமாக வைத்து வருகிறது. இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. வெற்றி, தோல்வி என்பதை விட பெங்களூர் அணி இந்த தொடரில், கடந்த தொடர்களை விட மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
விராட் கோலி போன்ற வீரர்கள் இந்த தொடரில் சொதப்பினாலும், பெங்களூர் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் தினேஷ் கார்த்திக், ஹர்சல் பட்டேல், ஹசில்வுட் போன்ற வீரர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதில் மற்றவர்களை விட தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் களமிறங்கி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருகிறார்.
முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக கருதும் முன்னாள் வீரர்கள் பலர், தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலேயே தினேஷ் கார்த்திக்கிற்கு நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “பாதி தொடர் தான் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தொடர் நிறைவடையும் வரை தினேஷ் கார்த்திக் இதே போன்று விளையாடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுத்தால், தற்போதைய அணியில் இருக்கும் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தினேஷ் கார்த்திக்கை 5,6 அல்லது 7வது இடத்தில் தான் களமிறக்க முடியும் என்பதால், யாரை நீக்கிவிட்டு அவரை அணியில் எடுப்பது..? ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாகவே விளையாடி வருகின்றனர், இதனால் என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைப்பது எளிதான விசயம் கிடையாது, அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவு தான்” என்று தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 210 ரன்கள் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.