மட்டமான பேட்டிங் இல்லை... ஜிம்பாப்வே அணியுடனான தோல்விக்கு இது தான் காரணம்; சுப்மன் கில் வேதனை !!  1
மட்டமான பேட்டிங் இல்லை… ஜிம்பாப்வே அணியுடனான தோல்விக்கு இது தான் காரணம்; சுப்மன் கில் வேதனை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிசேக் சர்மா (0), கெய்க்வாட் (7), ரியான் பிராக் (2), ரிங்கு சிங் (0), துருவ் ஜூரல் (6) உள்ளிட்ட வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர்.

மட்டமான பேட்டிங் இல்லை... ஜிம்பாப்வே அணியுடனான தோல்விக்கு இது தான் காரணம்; சுப்மன் கில் வேதனை !!  2

கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களும், ஆவேஸ் கான் 16 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 27 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததாலும், ஜிம்பாப்வே அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்காலும் இந்திய அணியை 102 ரன்களில் ஆல் அவுட் செய்த ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், ஜிம்பாப்வே அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில், பீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான மிக முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

மட்டமான பேட்டிங் இல்லை... ஜிம்பாப்வே அணியுடனான தோல்விக்கு இது தான் காரணம்; சுப்மன் கில் வேதனை !!  3

இது குறித்து சுப்மன் கில் பேசுகையில், “நாங்கள் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் பீல்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. எங்களது இந்த தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம். நாங்கள் இந்த போட்டியில் எதையுமே நிதானமாக செய்யவில்லை, அனைவரும் எதோ அவசரத்துடன் விளையாடியதை போன்றே இருந்தது. பீல்டிங்கில் சொதப்பினாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே முடிவு செய்திருந்தோம், ஆனால் பேட்டிங்கிலும் நாங்கள் எங்களது பங்களிப்பை சரியாக செய்யவில்லை என்பதே உண்மை. மிக விரைவாக 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நான் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்திருக்க வேண்டும், நான் பொறுமையாக களத்தில் நின்றிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்போம். நான் விக்கெட்டை இழந்தவிதம் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருந்தாலும், வெறும் 115 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறுகளை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *