இதனால்தான் நான் இஷான் கிஷனை வெளியில் வைத்துவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தேன் என பேசியுள்ளார் ரோகித் சர்மா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் கில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார்.
ஏனெனில் வங்கதேச அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தார். இஷான் கிஷனை இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரின் பிளேயிங் லெவனில் விளையாட வைக்கவில்லை.
இரட்டை சதம் அடித்து சிறந்த பார்மில் இருக்கும் வீரரை வெளியில் அமர்த்துவது ஆரோக்கியமானது அல்ல. சுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷனை பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் ரோகித் சர்மா கில் மீது முழு நம்பிக்கை வைத்து களமிறக்கினார்.
விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக இலங்கை ஒருநாள் தொடரில் 70 ரன்கள் மற்றும் 116 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த பார்மை நியூசிலாந்து அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தார். 149 பந்துகளில் 208 ரன்கள் விளாசி, என்னாலும் இரட்டை சதம் அடிக்க முடியும் எனக்காட்டினார்.
350 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மிச்சல் பிரேஸ்வெல், 140 ரன்கள் அடித்து இந்திய பவுலர்களை கதி கலங்கச் செய்தார். கடைசியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில்,
“பிரெஸ்வெல் மிகச்சிறப்பாக விளையாடினார். நன்றாக பவுலிங் சென்று கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் தவறி விடக்கூடாது என்று எண்ணினேன் துரதிஷ்டவசமாக, அதுவே நடந்து விட்டது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் சிறந்த அணி என்று எங்களுக்கு காட்டிவிட்டார்கள்.
சுப்மன் கில் பற்றி நிச்சயம் பேச வேண்டும். பலரும் அவரை ஏன் எடுத்தீர்கள் என்று விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால் அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்ததால், அந்த பார்மை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதன் காரணமாகத்தான் இலங்கை ஒருநாள் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுத்தேன். அதற்கு நியாயம் சேர்த்துவிட்டார். இப்போது இந்த தொடரிலும் நிரூபித்து விட்டார். எத்தகைய முக்கியமான வீரர் என்பதை ஒவ்வொரு போட்டிகளிலும் காட்டி வருகிறார்.” என ரோகித் சர்மா பேட்டி அளித்தார்.