ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற யுவராஜ் சிங்; வரலாற்றில் இன்று !! 1

ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற யுவராஜ் சிங்; வரலாற்றில் இன்று

யுவராஜ் சிங் உயிரை பணயம் வைத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க, உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெறித்தனமாக ஆடிய தினம் இன்று. – மார்ச் 20.

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதங்களில் ஒருவர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் சிங் 2017ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடினார். அதன்பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார்.

அதிரடியான பேட்டிங், அசத்தலான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்தவர் யுவராஜ் சிங். இந்திய அணி சர்வதேச கோப்பைகளை வென்ற தொடர்களிலெல்லாம் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது.

ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற யுவராஜ் சிங்; வரலாற்றில் இன்று !! 2

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகளையும் இந்திய அணி வென்றபோது, அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். குறிப்பாக 2011 உலக கோப்பையில் தொடர் முழுவதும் அபாரமாக ஆடி தனது முத்திரையை பதித்து உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். அந்த உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

அந்த உலக கோப்பையின்போதே புற்றுநோய்க்கான அறிகுறிகள் அவருக்கு தென்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக ஆடியவர். புற்றுநோயையே வென்றெடுத்தவர் யுவராஜ். மிகுந்த மனவலிமை கொண்டவர். யுவராஜ் சிங்கிற்கு பிறகு அவரது இடத்தை அவ்வளவு எளிதாக யாராலும் நிரப்பிவிட முடியவில்லை. அந்தளவிற்கு மிகச்சிறந்த வீரர் யுவராஜ் சிங்.

ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற யுவராஜ் சிங்; வரலாற்றில் இன்று !! 3

2011 உலக கோப்பை தொடரின் போது யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டன. அதிலும் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் கேன்சர் அறிகுறிகள் களத்திலேயே தென்பட்டன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த போட்டியில் அபாரமாக ஆடி, உலக கோப்பை கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் தனது முதல் சதத்தை பதிவு செய்த தினம் இன்று.

2011 மார்ச் 20 அன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான லீக் சுற்று போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சேவாக் ஆடவில்லை. சச்சினும் கம்பீரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களிலும் கம்பீர் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்கத்திலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் விராட் கோலியுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார் யுவராஜ் சிங்.

ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற யுவராஜ் சிங்; வரலாற்றில் இன்று !! 4

யுவராஜ் சிங்கும் அப்போதைய இளம் வீரர் விராட் கோலியும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 122 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி, 59 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங், உலக கோப்பையில் தனது முதல் சதத்தை இந்த போட்டியில் பதிவு செய்தார். அவர் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும்போதே பலமுறை களத்திலேயே வாந்தி எடுத்தார். ஆனாலும் கொஞ்சம் கூட மனதை தளரவிடாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

அந்த போட்டியில் 123 பந்தில் 113 ரன்களை குவித்தார் யுவராஜ் சிங். ஆனால் பின்வரிசை வீரர்கள் மளமளவென சரிந்ததால் இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 269 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வென்றது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த யுவராஜ் சிங், பவுலிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆண்ட்ரே ரசல் மற்றும் டிவோன் தாமஸ் ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அந்த போட்டி மற்றும் அவர் வாந்தி எடுத்த சம்பவம் குறித்து ஏற்கனவே பேசியுள்ள யுவராஜ் சிங், அந்த போட்டியில் வாந்தி எடுத்தபோது, சென்னை வெயிலும் சூடும் செட் ஆகவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் உலக கோப்பையில் சதமடிக்க வேண்டும் என்ற எனது ஆசை அதற்கு முன்னர் நிறைவேறவில்லை. ஏனெனில் அதற்கு முன் பெரும்பாலும் ஆறாம் வரிசையில் இறங்கியதால் என்னால் உலக கோப்பையில் சதமடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் சேவாக்கும் ஆடவில்லை. எனவே பெரிய இன்னிங்ஸ் ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. இந்த இன்னிங்ஸை முழுவதுமாக ஆடிவிட வேண்டும், அதற்கு பின் எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று இறைவனிடம் வேண்டினேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.

அன்றைய தினம் யுவராஜ் அடித்த சதம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானது மட்டுமல்ல.. கேன்சருக்கு எதிரானதும் கூட. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை மட்டுமல்லாமல் கேன்சரையும் எதிர்கொண்டு ஆடி யுவராஜ் சிங், தனது முதல் உலக கோப்பை சதத்தை அடித்த தினம் இன்று.. மார்ச் 20.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *