இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷதீப் சிங் குறித்து கடுமையாக விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆக்கப் ஜாவத்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் நெருங்குவதற்கு இன்னும் சில வார காலங்களே இருக்கின்றன. அதற்குள் பல்வேறு கருத்துக்களும் கணிப்புகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுவிட்டது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினர் வெளியிட்டனர். ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த இளம் பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. இதற்கு முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணியில் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்ரிருந்தனர்.
அனுபவமிக்க புவனேஸ்வர் குமாரும் டெத் ஓவர்களில் சொதப்பலாக பந்து வீசினார் இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவர் வீசிய அர்ஷதீப் சிங் அருமையாக ரன்களை கட்டுப்படுத்தி மிக நெருக்கமாக எடுத்துச் சென்றார். இதன் காரணமாகவே உலகக் கோப்பை தொடரில் டெத் ஓவர்களில் பயன்படுத்துவதற்காக அர்ஷதிப் சிங் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
அர்ஷதீப் தேர்வு செய்யப்பட்டது குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் ஆக்கப் ஜாவத், இவர் மிகவும் அடிப்படையான பந்துவீச்சாளர்; இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என தெரிவித்தார். அவர் கூறுகையில்,
“அணியில் மிகவும் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும். அடிப்படையாக பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம் இல்லை. புவனேஸ்வர் குமார் மிக சிறப்பாக ஸ்விங் செய்வார். வேறு சில பவுலர்கள் மிகவும் வேகமாக வீசுவார்கள் மற்றும் சில பந்துவீச்சாளர்கள் உயரமாக இருப்பார்கள். பவுன்சர்கள் அதிகமாகவும் வீசுவார்கள். குறிப்பாக பும்ரா போன்ற வீரர்கள் துல்லியமாக யார்கர்கள் வீசுவார்கள். ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அதிக அளவில் பவுன்சர்கள் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அர்ஷதிப் சிங் இவை எதிலும் சிறப்பாக இல்லை. மிகவும் அடிப்படையாகவே பந்து வீசுகிறார். டி20 உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இது எந்த வகையில் உதவும் என்று எனக்கு புரியவில்லை. எதன் அடிப்படையில் தேர்வாளர்கள் இவரை எடுத்தார்கள் என்பதும் புரியவில்லை. அர்ஷதீப் சிங் எடுத்தது மிகவும் மோசமான தேர்வு.” என்று கடுமையாக விமர்சித்தார்.