இந்திய அணி பார்த்து பயப்படுற ஒரே ஒரு டீம் இப்ப இது தான்; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்
நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள, இந்திய அணி விரும்பாது என முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள ஒரு இடத்தை பிடிக்க நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த முறை அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்ள போகிறது..? இந்த முறையாவது இறுதி போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்தநிலையில், அரையிறுதி சுற்று குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரரான ஹார்மிசன், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி விரும்பாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹார்மிசன் பேசுகையில், “நியூசிலாந்து அணி வலுவான அணி. நியூசிலாந்து அணியை யாருமே குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. மற்ற அனைத்து அணிகளை விட நியூசிலாந்து அணியை அரையிறுதி போட்டியில் எதிர்கொள்வதை இந்திய அணி நிச்சயம் விரும்பாது. நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து வந்துவிட்டனர். நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் தற்போது சிறப்பான பார்மில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் இதற்கு முன்பு இது போன்ற பெரிய போட்டிகளில் மோதியுள்ளதால், நிச்சயமாக நியூசிலாந்து அணியை விட இந்திய அணி மீதே அதிக அழுத்தம் இருக்கும். இந்திய வீரர்கள் அதிக அழுத்தம் நிறைந்த பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இந்திய அணிக்கு அழுத்தம் ஒரு பெரிய விசயமாக இருக்காது என்றே கருதுகிறேன். ஆனால், நிச்சயமாக நியூசிலாந்து அணியை அரையிறுதியில் மீண்டும் எதிர்கொள்வதை இந்திய அணி விரும்பாது” என்று தெரிவித்தார்.