ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான் இன்று அலிஸ்டர் குக் பிரமாதமான சதம் ஒன்றை எடுக்க அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்தத் தொடரின் முதல் சதத்தை எடுத்து ஆடிவருகிறார். இருவரும் இரட்டைச் சதக் கூட்டணியை அமைத்து இந்தியப் பந்து வீச்சை வறுத்து எடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் என்று மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் மேலும் வலுவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நிலைக்கு இந்திய பீல்டர்களே காரணம்.
ஜோ ரூட் 46 ரன்களில் இருந்த போது ஜடேஜா பந்தை பின்னால் சென்று ஒரே அறை அறைந்தார். ரஹானே அங்கு சுறுசுறுப்பாக இல்லை, கணிக்கவும் இல்லை தாமதமாக வினையாற்றி கேட்சைக் கோட்டை விட்டார்.
இதற்கு முன்னதாக ஜோ ரூட் ஜடேஜாவை சிறப்பாக ஆடினார், 4 பவுண்டரிகள் அவரை மட்டும் விளாசினார், சக்திவாய்ந்த ஸ்வீப் ஷாட்களை அவருக்கு எதிராகப் பயன்படுத்தினார். பிறகு அரைசதம் கடந்து ஜடேஜாவை மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு அருமையான சிக்சரை அடித்தார் ரூட்.
இந்நிலையில் கேட்ச் விட்டதைப் பயன்படுத்தி ஆடி வந்த ரூட் 94 ரன்களில் இருந்த போது இந்தப் போட்டியின் அதிர்ஷ்டம் கெட்ட பவுலர் மொகமது ஷமி பந்தை லெந்தில் வீசினார் 4வது ஸ்டம்ப் லைன், ரூட் பந்தை தேர்ட் மேன் திசையில் திருப்பி விட நினைத்தார், நல்ல எட்ஜ், பந்து நேராக முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த புஜாராவின் கைகளுக்குச் சென்றது, வாங்கி தரையில் விட்டார், ரிஷப் பந்த் டைவ் அடித்ததால் கவனம் மாறியிருக்கலாம் என்ற வாதத்தை வைக்க முடியாது, காரணம், ரிஷப் பந்த் டைவ் அடிக்கும் முன்பே பந்து புஜாரா கைகளுக்குக் கேட்சாகச் சென்றது. மிக மோசமான ட்ராப்.
அதுவும் இந்த டெஸ்ட் போட்டியில் ஷமி ஒரு 100 பந்துகளையாவது மட்டை விளிம்பைக் கடந்து வீசியிருப்பார், ஒன்றும் எட்ஜ் ஆகவில்லை, மொயின் அலி, பிராட், பட்லர் என்று அனைவரும் ஷமி பந்தில் பீட்டன் ஆவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். விக்கெட் விழவில்லை இதனால் கடும் வெறுப்பில் இருந்தார் ஷமி, இப்படியிருக்கையில் ஏகப்பட்ட ரன்கள் முன்னிலையை நோக்கி இங்கிலாந்து ஆடிக்கொண்டிருக்கும் போது ரூட்டிற்கு ரஹானே ஒரு கேட்சை சுறுசுறுப்பான ரிஃப்ளெக்ஸ் இல்லாமலும் புஜாரா எந்த வித கவனமும் இல்லாமலும் 2 கேட்ச்களை விட்டால் ஏற்கெனவே ஷமியின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது இல்லாமல் வேறு என்னவாம்? முதலில் இந்த யோ-யோ டெஸ்ட்டையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டுவிட்டு கேட்சிங்கை தீவிரமாகப் பயிற்சியாகவும், அணியில் தேர்வாகக் கேட்சைப்பிடிப்பதை ஒரு அளவுகோலாகவும் மாற்ற வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் பிராட், பட்லர் ஆடும்போது விராட் கோலியின் எந்த வித யோசனையுமில்லாத களவியூகத்தினால் ஷமிக்கு விக்கெட் விழாமல் போனதோடு இந்த முறை கேட்சையும் கோட்டை விட்டு வெறுப்பேற்றியுள்ளனர்.
கடைசியில் ரூட் தனது 14வது சதத்தை எடுத்து முடித்து 108 ரன்களுடனும் அலிஸ்டர் குக் 132 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இங்கிலாந்து 289/2 என்று 329 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.