கவுதம் கம்பீர், சுனில் சேஸ்திரி உள்பட 112 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், மூத்த வழக்கறிஞர் ஃபூக்லா, மலையாள திரைப்பட நடிகர் மோகன் லால் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் கரியா முண்டா, மலையேறும் வீரர் பச்சேந்திரி பால், மக்களவை எம்.பி நாராயண் யாதவ், ஜான் சேம்பர்ஸ், சுக்தேவ் சிங், பிரவின் கோர்தன், மஹாஷாய் தரம்பால் குலாடி, தர்ஷன் லால் ஜெயின், அஷோக் லக்ஷ்மண்ராய், புத்தாதியா முகர்ஜி உள்ளிட்ட 14 பேருக்கும் பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா, பாடகர் ஷங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், மருத்துவர் ராமசாமி வெங்கடசுவாமி, சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 93 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அதேபோல சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் புபேஷ் ஹசரிங்கா ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோவிந்த் அறிவித்தார்.