கிரிக்கெட் தொடருக்கு ஓகே சொன்ன பிரதமர்.. இங்கிலாந்து செல்லும் வீரர்கள்!
ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி கொடுத்ததால், இங்கிலாந்து செல்ல தயாராகிறது பாகிஸ்தான் அணி.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து அனைத்து நாடுகளிலும் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு, வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. பயிற்சிக்கு கூட அவர்கள் வெளி வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் தொடர்ந்து வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மேலும் ஒரு மாத காலத்திற்கு எவ்வித போட்டிகளும் நடப்பதற்கான அறிகுறி இல்லை.
இதற்கிடையில் இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வீரர்கள் பயிற்சிக்கு திரும்பினர். ஜூலை மாதம் 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. அந்த தொடர் முடிவுற்ற பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக, பாகிஸ்தான் நிர்வாகம் 29 வீரர்கள் கொண்ட பட்டியலை அண்மையில் வெளியிட்டது. மேலும், பாகிஸ்தானில் கொரோனா தாக்கம் காரணமாக, வெளிநாடு செல்ல தடை இருந்ததால் பிரதமரின் அனுமதிக்காக காத்திருந்தனர்.
இன்று, பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்ல அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அனுமதி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் 29 பேர் உடன் 14 அணி நிர்வாகிகளும் செல்கின்றனர்.
இவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா பரிசோதனையும், மேலும் 3 முதல் 4 வாரங்களுக்கு தனிமைப்படுத்தி பயிற்சியும் நடைபெறும். அதன் பிறகு, மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிபந்தனைகள் விதித்துள்ளது.
இதற்கு ஒப்புக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி நிர்வாகம் இம்மாதம் இறுதியில் இங்கிலாந்து செல்லவிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறுவதால் வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.