பீல்டிங்கில் படு மோசம்… வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது போட்டியில் பாகிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் மோதின.
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாண்டோ 54 ரன்களும், அஃபிஃப் ஹுசைன் 24 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஷாதப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டதால் பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டிற்கே 57 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 25 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த முகமது ஹாரிஸ் 31 ரன்களும், சான் மசூத் 24 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.