தென் ஆப்ரிக்கா அணியின் விதியில் மீண்டும் விளையாடிய மழை… அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அஹமத் 51 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்கியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்பின் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டி காக் (7), ருச்சோவ் (7), மார்கரம் (20) போன்றோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். போதாக்குறைக்கு போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் 14ஆக குறைக்கப்பட்டு, தென் ஆப்ரிக்கா அணிக்கு 42 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மழைநின்றபின் சாத்தியமே இல்லாத இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம், பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஷாதப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. எஞ்சியுள்ள போட்டிகளின் முடிவு பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க உள்ளன.