“தேர்வுக்குழு நடந்துகொள்வது சரியில்லை..”; கடைசியாக வாயைத்திறந்த இந்திய விக்கெட் கீப்பர்!
தேர்வுக்குழு இந்த விஷயத்தில் நடந்துகொள்வது சற்றும் சரியில்லை என சாடியுள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல்.
2019ஆம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக இதுவரை ஆடவில்லை. அவர் இல்லாததால் இந்திய அணியில் அடுத்த நிரந்தர விக்கெட் கீப்பர் யார்? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. ரிஷப் பண்ட்டை முதன்மை விக்கெட் கீப்பராக பிசிசிஐ பயன்படுத்தி வந்தது. ஆனால் அவர் தொடர்ந்து சொதப்பி வந்ததால், கே எல் ராகுலை வைத்து பரீட்சித்துப் பார்த்து, அது பலனளிக்கவே 2 தொடர்களுக்கு அவர் பயன்படுத்தப்பட்டார்.
ஆனால் கேஎல் ராகுல் நிரந்தர தீர்வல்ல. எனவே இதனை சரிசெய்ய வேறொரு விக்கெட் கீப்பரை பரீட்சிக்க இந்திய அணி தேடி வருகிறது.
தோனி இந்திய அணிக்கு கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார். அவர் வருகைக்கு பிறகு நிரந்தர விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே. அவருக்கு முன்பாக இந்திய அணியில் இடம் பிடித்த பார்த்தீவ் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டனர்.
ஒரு சில போட்டிகளில் மட்டுமே பார்த்திவ் படேல் சற்று சொதப்பலாக ஆடினார். அதற்காக அவர் தற்போது வரை நிரந்தரமாக இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இதே நிலைமை தான். தினேஷ் கார்த்திக் முழுநேர பேட்ஸ்மேனாக மாறிவிட்டார் வேறு வழியின்றி.
இந்த விவகாரம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் பார்த்தீவ் பட்டேல். அவர் அளித்த பேட்டியில், “விக்கெட் கீப்பர் விவகாரத்தில் பிசிசிஐ பொறுமை காப்பதில்லை. எல்லா போட்டிகளிலும் எல்லா தொடர்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நான் தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட்டில் ஆடினேன். அதன்பிறகு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டேன். என்னிடம் பிசிசிஐ நடந்துகொள்வது சரியில்லை என்றுதான் கூறவேண்டும்.

எனக்கு மட்டுமல்ல; தினேஷ் கார்த்திக்கும் இதே நிலைதான். அவர் இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக் ஆடினார். பின்னர் ஒதுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தினேஷ் – சஹா இரண்டு பேருமே இல்லாததால் ரிஷப் பண்ட் ஆடினார்.” என்றார்.