14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் ரஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி தோல்வி அடைய வேண்டிய போட்டிகளில் எல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இதனால் பண்ட்டை அடுத்த தோனி என்று அனைவரும் புகழ்ந்து வந்தனர். முதலில் தோனியை போன்று பேட்டிங் செய்தார், தற்போது கேப்டன் செய்ய வந்திருக்கிறார் என்று ரசிகர்கள் புகழ்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பார்த்தீவ் பட்டேல் ரிஷப் பண்ட்டுக்கு கிடைத்திருக்கும் கேப்டன் பொறுப்பு குறித்து பேசியிருக்கிறார்.

பார்த்தீவ் பட்டேல் பேசுகையில் “ ரிஷப் பண்ட் களத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். இவர் ஒரு புத்திசாலித்தனமான வீரர். அதுதான் ஒரு டி20 போட்டி விளையாடும் போது உங்களுக்கு தேவை. அப்போது உங்கள் மனதில் எந்த ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது. தோனியுடன் தன்னை ஒப்பிடும் வகையில் தனது ஆட்டத்தை உயர்த்தி இருக்கிறார். இதற்கு பண்ட் கவலைப்பட வேண்டியதில்லை, பண்ட்டால் தோனியை விட சிறப்பாக விளையாட முடியும். இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக இனிமேல் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.