பரபரப்பாக முடிந்த ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் 154 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் அணி. கடைசிவரை போராடி தோற்றது பஞ்சாப் அணி.
மொகாலியில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.
அடுத்து வந்த மேத்யூ ஷாட் 38 ரன்கள், ஷாருக் கான் மற்றும் ஷாம் கர்ரன் இருவரும் தலா 22 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 25 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டுத்தடுமாறி இ விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் அறிமுக வீரர் மோகித் சர்மா, நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
154 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய சகா 19 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு சகா-கில் ஜோடி 48 ரன்கள் சேர்த்தது.

அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருந்த சாய் சுதர்சன், இப்போட்டியில் சிறப்பாக துவங்கினார். ஆனால் பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்லமுடியாமல் 19 ரன்களுக்கு அவுட் ஆனார். சென்ற போட்டியில் உடல்நிலை காரணமாக விளையாடாத ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்தவுடன் எட்டு ரன்களுக்கு அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.
மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுக்குள் வைத்து குஜராத் அணிக்கு அழுத்தம் கொடுத்தது. ஒரு முனையில் நின்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் எண்ணினர். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியை கட்டுப்படுத்தி, ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. குஜராத் அணி கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டியதாக இருந்தது.
கடைசி ஓவரை ஷாம் கர்ரன் வீசினார். சிறப்பாக ஆடி வந்த சுப்மன் கில் விக்கெட்டை க்ளீன் போல்டு செய்து, பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். அடுத்தடுத்த இரண்டு பந்துகளையும் துல்லியமாக வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங்கில் இருந்த ராகுல் திவாட்டியா நேர்த்தியாக ஒரு பவுண்டரி அடித்து குஜராத் அணிக்க்கு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.