இனிமேல் அனைத்து டெஸ்டிலும் “பிங்க் பந்தை” பயன்படுத்த வேண்டும்; முன்னாள் கேப்டன் கொடுத்த அட்டகாசமான யோசனை!
இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பிங்க் நிற பந்தை பயன்படுத்த வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளையும் பகல்-இரவு ஆட்டமாக நடத்த வேண்டுமென பல கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் முதன்முதலாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் போது பிங்க் நிறப்பந்து பயன்படுத்தப்பட்டது.
இதற்கு அடுத்ததாக வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருகிறது. இதில் ஏதேனும் ஒரு போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட்டு அதில் பிங்க் நிறப்பந்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வரை பகல்-இரவு ஆட்டங்களில் மட்டுமே பிங்க் நிறப்பந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனிமேல் நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பிங்க் நிறப்பந்தை பயன்படுத்த வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இங்கிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் மழை காரணமாக தடைபட்டது. ஆனால் இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக தடைபட்டது.
இந்த தருணத்தில் பிங்க் நிறப்பந்து பயன்படுத்தப்பட்டிருந்தால், இரவு நேரங்களிலும் நன்கு வெளிச்சமாக பந்து தெரிந்திருக்கும். இதனால் ஆட்டத்தில் தடை ஏற்பட்டிருக்காது. மழை காரணமாக ஆட்டத்தில் ஏற்படும் தடையை எந்த விதத்திலும் மாற்ற இயலாது. ஆனால் வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் தடைபடுவதை நாம் பிங்க் நிற பந்து பயன்படுத்தும்போது சரி செய்யலாம். இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பிங்க் நிற பந்தை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது. இந்த கோரிக்கையை நான் ஐசிசி இடம் தெரிவிக்க உள்ளேன். அவர்கள் இதனை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கட்டும்.” என்றார்.