பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி தவிர அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியதால், 20 ஓவர்களில் 126/9 ரன்கள் மட்டுமே அடித்தது ஆர்சிபி அணி. பவுலிங்கில் லக்னோ அணி அபாரம்.
லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கே தேர்வு செய்தது.
ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தனர். இது ஆட்டத்தில் மிக முக்கியமான பங்களிப்பாக இருந்தது. நன்றாக விளையாடி வந்த விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து உள்ளே வந்த அனுஜ் ராவத் 9 ரன்கள், மேக்ஸ்வெல் 4 ரன்கள், பிரபுதேசாய் 6 ரன்கள் என வரிசையாக ஆட்டமிழக்க, மிடில் ஆர்டரில் மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணி சிக்கலை சந்தித்தது. ஒரு முனையில் மிகவும் நிதானத்துடன் ஆடி வந்த கேப்டன் டு பிளசிஸ் 40 பந்துகளில் 44 ரன்கள் அடித்திருந்த போது அவுட் ஆனார்.
சிறிது நேரம் போராடிய தினேஷ் கார்த்திக் 16 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஆனாலும் ஆர்சிபி அணி தட்டுத்தடுமாறி 100 ரன்கள் கடந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.
ஒரு கட்டத்தில், விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் அமைத்துக்கொடுத்து துவக்கத்தினால் 150 ரன்களை கடப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. மீண்டும் ஒருமுறை ஓபனிங் பார்ட்னர்ஷிப் உடைந்த பிறகு, அடுத்ததாக வந்த வீரர்கள் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காதது ஆர்சிபி அணிக்கு சரிவை கொடுத்து, 126 ரன்களில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
லக்னோ அணிக்காக நன்றாக பந்துவீசிய நவீன் உல் ஹக் மூன்று விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் மற்றும் அமித் மிஸ்ரா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.