இந்த ஒரு ரூல்ஸ மட்டும் வேணாம் ப்ளீஸ்… நாங்களும் பாவம் தான; ஓபனாக கோரிக்கை வைத்த முகமது சிராஜ்
ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் கடந்த 17 வருடங்களாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் இருப்பதால், இதனை பிசிசிஐ., அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும். ஐபிஎல் போட்டிகளை மேலும் பரபரப்பாக்குவதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறையை பிசிசிஐ., அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமான போட்டியாக மாறியதால் 250+ ரன்களை பல அணிகள் அசால்டாக அடித்து பல சாதனைகள் படைத்து வருகின்றன.
என்னதான் இம்பேக்ட் விதிமுறை போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கினாலும், இதன் மூலம் ஒரு விளையாட்டின் உண்மைத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இம்பேக்ட் விதிமுறையை நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இம்பேக்ட் விதிமுறையில் தனக்கு பெரிய உடன்பாடு இல்லை, இதனால் சிவம் துபே போன்ற பந்துவீசுவதற்கு தேவையே இல்லாமல் போய்விட்டது, கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என ஓபனாக பேசியிருந்தார்.
இம்பேக்ட் விதிமுறை குறித்தான ரோஹித் சர்மாவின் சமீபத்திய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜும் இம்பேக்ட் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து முகமது சிராஜ் பேசுகையில், “இம்பேக்ட் விதிமுறையை நீக்க வேண்டும். பெரும்பாலான ஆடுகளங்கள் பிளாட்டாக இருப்பதால் பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். இம்பேக்ட் விதிமுறையால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை என்ற நிலையே நிலவி வருகிறது. பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர். பேட்ஸ்மேன்களால் 270+ ரன்கள் அசால்டாக எடுக்க முடிகிறது, ஆனால் பந்துவீச்சாளர்களான எங்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை” என்று தெரிவித்தார்.