கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி ரசிகர்களைப்பார்த்துச் செய்த செயலால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் போட்டி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு தடையிலிருந்து தப்பித்த விஷயம் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது அப்போது, சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ரசிகர்கள் கிண்டல் செய்ததைத் தாங்க முடியாத கோலி, ரசிகர்களைப் பார்த்து தனது கையின் நடுவிரலை உயர்த்தி சைகை செய்தார். இது மறுநாள் ஆஸ்திரேலிய நாளேடுகளில் வெளியாகி பெரும் பிரச்சினையானது. ஆனால், அதன்பின் கோலி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத்தகவலும் இல்லை.
இந்தச்சம்பவத்துக்கு பின் நடந்த விஷயங்களை கேப்டன் விராட் கோலி, விஸ்டன் கிரிக்கெட் மாத இதழில் பகிர்ந்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் கையின் நடுவிரலை உயர்த்தி சைகை செய்வது மிகவும் அநாகரீகமான, தனிமனிதரைஇழிவுப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் கடந்த 2012-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது நான் மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தேன். அப்போது ரசிகர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்ததும், அவர்களைப் பார்த்து எனது கைநடுவிரலை உயர்த்தி சைகை செய்தேன். அதன் விபரீதம் அப்போது புரியவில்லை. மறுநாள் என்னுடைய புகைப்படம் அனைத்து நாளேடுகளிலும் வந்திருந்தது.
என்னை போட்டிநடுவர் ரஞ்சன் மடுகலே அழைத்திருந்தார். அவரின் அழைப்பே ஏற்றுச் சந்திக்க சென்றேன். மைதானத்தில் நேற்று என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டார். ஒன்றும் நடக்கவில்லை என்று நான் கூறினேன்.
அவர் திடீரென கோபமடைந்து, என் முன் நாளேட்டை தூக்கிஎறிந்து இதற்கு என்ன அர்த்தம், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ஆத்திரமாகக் கேட்டார்
ஏதோ மிகப்பெரிய தவறுநடந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. உடனே என்னை மன்னித்துவிடுங்கள், தயவு செய்து என்னைத் தடை செய்துவிடாதீர்கள். அதன் விபரீதம் தெரியவில்லை என்றேன். அவர் அதை புரிந்து கொண்டு, என்னை ஏதும் சொல்லாமல் வெளியே அனுப்பிவிட்டார்.
என்னுடைய செயல்பாடுகள் இளமைக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி பெருமை கொண்டேன். ஆனால், என்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. உலகில் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளக்கூடாத என்ற சிந்தனையில் அவ்வாறு நான் இருந்தேன். ஆனால்,அதை இப்போது நினைக்கும் போது மகிழ்ச்சி இல்லை. இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்