வாஷிங்டன் சுந்தர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு சரியான வீரராக இருப்பார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர்.
நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அடுத்த இரண்டு போட்டிகள் மழை காரணமாக பாதியிலேயே ரத்து ஆனதால், நியூசிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்துவிட்டது.
முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 16 பந்துகள் மட்டுமே பிடித்து 37 ரன்கள் அடித்து அசத்தலாக பினிஷிங் ரோல் செய்தார். வாஷிங்டன் சுந்தர் அதை தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்த போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் மிகவும் நிதானத்துடன் விளையாடி 64 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார்.
இரண்டு போட்டிகளிலும் இரண்டு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பைக்கு வாஷிங்டன் சுந்தரை கவனத்தில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
“கேள்விகளுக்கு இடமின்றி வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் அபாரமாக விளையாடினார் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்து இப்படி விளையாடியது, அவரது திடமான மனநிலையை காட்டுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.
முன்பு போல இல்லாமல் அவரது ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாளுக்கு நாள் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். மற்ற வீரர்கள் சொதப்பிய போது தனியாக அவரது ஆட்டம் தெரிந்தது.
இந்திய அணிக்கு இவரைப் போன்ற வீரர் நிச்சயம் தேவை. ஏனெனில் கடந்த காலங்களில் யுவராஜ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் செய்ததை போல வாஷிங்டன் சுந்தர் செயல்படுகிறார். பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் அணியில் இல்லாதபோது அந்த இடத்தை நிரப்பி திறம்பட செய்வதற்கு இவரை போன்ற வீரர்கள் தேவை. ஆகையால் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இவரை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.