இந்திய அணிக்கு ரஹானே நிச்சயம் தேவை; முன்னாள் வீரர் ஆதரவு
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், ரஹானே இடம்பெறாததால் எழுந்துள்ள சர்ச்சை இன்றும் ஓய்ந்தபாடில்லை.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில், தென் ஆர்பிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் மூலம் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு, ரஹானே போன்று வெளிநாட்டு தொடர்களில் நல்ல அனுபவம் வாய்ந்த வீரரை இந்திய அணியில்யில் புறக்கணிக்கப்பட்டுதே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS
வெளிநாட்டு தொடர்களில் நல்ல அனுபவம் வாய்ந்த ரஹானே, இலங்கை அணியுடனான தொடரில் சொதப்பியதன் காரணமாக, இந்த தென் ஆப்ரிக்காவிற்கு முதல் போட்டியில் அவரை எடுக்காமல், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா அணியில் களமிறக்கப்பட்டார்.
இதற்காக இந்திய அணியையும், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ரஹானேவின் தனிப்பட்ட பேட்டிங் பயிற்சியாளருமான பிரவீன் அம்ரெ, ராஹானே இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ரஹானே நீக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவர் கூறுகையில் , இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதுவும் இந்திய மண்ணிலேயே நடைபெற்ற போட்டிகளில் மோசமாக விளையாடிய ரஹானேவிற்கு தற்போது இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவும், ஆலோசனைகளும் நிச்சயம் தேவை, அதற்கான நேரமும் இது தான்.
கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரியின் ஆதரவுடன் ரஹானே இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் பட்சத்தில் அவர் நிச்சயம் தனது பழைய ஃபார்மிற்கு திரும்பி, அணிக்கு கைகொடுப்பார் என்றும் பிரவீன் தெரிவித்துள்ளார்.
தொடர் சர்ச்சைகளாலும், முதல் போட்டியில் கற்று கொண்ட பாடத்தின் காரணமாகவும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.