3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்த 2வது போட்டியில் பங்களாதேஷ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் தற்பொழுது கைப்பற்றியுள்ளது.
முதல் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ரஹீம்
முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்தது. ஓபனிங் வீரர் தமிம் இக்பால் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் தாஸ் 25 ரன்களிலும் ஷகிப் அல் ஹசன் 0 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆனால் 4-வது வீரராக களமிறங்கிய ரஹீம் 127 பந்துகளில் 125 ரன்கள் அடித்து, தனியாளாக பங்களாதேஷ் அணியை முன்னெடுத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக மகமதுல்லா 41 ரன்கள் குவித்தார்.அதன் காரணமாக இறுதியில் பங்களாதேஷ் அணி 246 ரன்கள் குவித்தது.
சொதப்பித் தள்ளிய இலங்கை பேட்டிங்
இலங்கை அணி வீரர்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். குணத்திலகா 24 ரன்களிலும், குஷால் பெரரா 14 ரன்னிலும், நிசாங்கா 20 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 15 ரன்னிலும், தனஞ்சய டி சில்வா 10 ரன்னிலும் அடுத்தடுத்த அவுட்டாகி செல்ல ஆட்டம் படிப்படியாக பங்களதேஷ் கைக்குச் சென்றது.

40 ஓவர் முடிவில் இலங்கை அணி 141 ரன் குவித்து 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்டஃபிசூர் 3 விக்கெட்டுகளையும், மேகிடி ஹசன் 3 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.இறுதியில் டி எல் எஸ் முறைப்படி பங்களாதேஷ் அணி 103 ரன்களில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி தற்போது கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசிப் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியிலாவது இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.