டிராவிட்டுக்கு துரோணாச்சாரியர் விருது கொடுக்க கூடாது; பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் போர்கொடி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் பெயரை துரோணாச்சாரியா விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு, சில பிசிசிஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் (13,288 ரன்கள்), 344 ஒருநாள் (10,899 ரன்கள்), ஒரே ஒரு டி-20 (31 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இந்திய அணியை பல போட்டிகளில் தோல்வியில் இருந்து தூணாக தடுத்து நிறுத்தியதால், இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2012ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரது சிறப்பான பயிற்சியில், இளம் இந்திய அணி நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் நான்காவது முறையாக பட்டம் வென்று அசத்தியது.
இந்த சாதனைக்காக சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருதுக்கு, டிராவிட் பெயரை பரிந்துரை செய்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களான கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, உள்ளிட்ட வீரர்களை உருவாக ரத்தமும் வேர்வையும் சிந்தி பல ஆண்டுகள் அவர்களின் பயிற்சியாளர்கள் உழைத்துள்ளனர். ஆனால் வெறும் 3 ஆண்டுகள் பயிற்சியாளர் அனுபவம் கொண்ட டிராவிட் பெயரை எப்படி பரிந்துரைக்கலாம் என பிசிசிஐ., அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிராவிட் புகழ்பெற்றவர் என்பதால் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவு குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.