அதிரடி வீரரை வெறும் 75 லட்சத்துக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
2011ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியில் முன்னணி வீரராக இருந்து வந்த டேவிட் மில்லர். பலமுறை தனது அதிரடியால் அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். 38 பந்துகளில் சதம் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை அந்த அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரு சீசன்களாக மில்லர் அணிக்கு எதிர்பார்த்த அதிரடியை வெளிப்படுத்தவில்லை.
வயது காரணமாகவும், போதிய உடல்தகுதி இல்லாமலும் போனதால் இந்த சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது. ஆதலால், இந்த ஆண்டு இவரை பஞ்சாப் அணி வெளியேற்றி ஏலத்தில் விட்டது.
இவரை ஆரம்பத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை. இரண்டாவது முறையாக ஏலத்திற்கு இவரது பெயர் வாசிக்கப்பட்டபோது, இவரது ஆரம்ப விலையான 75 லட்சத்திற்கு எடுக்க ராஜஸ்தான் முன்வந்தது. எவரும் மறு ஏலம் கேட்காததால் 75 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.
மில்லர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் சிறப்பாக ஆடிவருவதால், இது அந்த அணிக்கு சிறந்த ஏலமாக கருதப்படுகிறது.