பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்வினை வெளியேற்றிவிட்டு புதிய ஆல்-ரவுண்டரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வாங்கியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
2018 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்ற அஸ்வின் கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு சீசனின் முடிவிற்குப் பிறகு அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு செல்ல இருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால் இதற்கு இரு அணிகளும் மவுனம் காத்துவந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதனை உறுதி செய்துள்ளது டெல்லி அணி. அடுத்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல் அணிக்காக ஆடுகிறார் அஸ்வின்.
இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை வாங்கியுள்ளது பஞ்சாப் அணி. இவர் 2018 ஆம் ஆண்டு 6.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணிக்கு 22 போட்டிகளில் ஆடிய கௌதம் 144 ரன்களும் 12 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தார். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் கோபாலுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால் கௌதமிற்கு ப்ளெயிங் லெவெனில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு தற்போது விற்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சிறப்பான பார்மில் இருக்கும் கௌதம், இந்த ஆண்டு கர்நாடக பிரீமியர் லீகில் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகள் மற்றும் 125 ரன்கள் அடித்து டி20 போட்டியில் மிகப்பெரிய சாதனையை படைத்தார்.
மேலும் இந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் தியோதர் டிராபி இரண்டு தொடரிலும் அதிரடியை வெளிப்படுத்தி அசத்தினார். நல்ல பார்மிலிருக்கும் இவரை ராஜஸ்தான் அணி விற்றதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.