இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும்? என்று பலரும் கணிப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் மைக்கேல் வாகன்.
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று வந்ததிலிருந்து ஐபிஎல் சீசன்கள் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவியது. ஓது சீசன் இந்தியாவில் ரசிகர்கள் இல்லாமலும், அதற்கு அடுத்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திலும், மற்றொரு சீசன் இந்தியாவில் குறிப்பிட்ட 4 மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
2019ஆம் ஆண்டு வரை எப்படி நடந்ததோ, அதுபோல இந்த வருட ஐபிஎல் சீசன் மீண்டும் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் ஒரு போட்டி, வெளி மைதானத்தில் ஒரு போட்டி என்கிற வகையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
கடந்த ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது. இரண்டு அணிகளுமே சிறப்பாக செயல்பட்டு பிளே-ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பையையும் அடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆகையால் இந்த இரண்டு அணிகள் மீதும் இந்த ஐபிஎல் சீசனில் பெரிதளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேபோல் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீதும் இந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. ஏனெனில் அவர்களது சொந்த மைதானத்தில் மீண்டும் விளையாடுகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஐபிஎல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எந்த அணி கோப்பையை தட்டிச்செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது? எந்தெந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்? என்கிற என கணித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்த ஐபிஎல் சீசன் குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வருடம் மே மாதம் இறுதியில் ஐபிஎல் கோப்பையை தூக்குவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியாக தான் இருக்கும்.” என்று பதிவிட்டிருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் இருந்து வந்தாலும், கவனிக்கக்கூடிய வீரராக ஜோஸ் பட்லர் இருக்கின்றார்.
பட்லர் இங்கிலாந்து டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் சாம்பியன் பட்டத்தையும் இங்கிலாந்து அணிக்கு பெற்றுக்கொடுத்தார். அந்த வகையில் இங்கிலாந்து வீரருக்கு சாதகமாக மைக்கல் வாகன் தனது கணிப்பை கூறியுள்ளார் என்கிற கருத்துக்களும் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.