23-வயது கேரள வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் கதவை தட்டினார். தற்போது நடந்து வரும் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தேர்வாளர்கள் கண்களில் தென்பட்டிருக்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளரிடம் பேசிய இந்திய அணியின் தேர்வாளர் எம்.ஸ்.கே பிரசாத் இந்திய அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பது பற்றி பேசினார். அப்போது சாம்சன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார், இலங்கை தொடராகவும் இருக்கலாம் என பிரசாத் கூறினார்.
“இந்த சீசனில் சஞ்சு சாம்சன் ரன் அடிப்பது சந்தோசமாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார். அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார்,” என எம்.ஸ்.கே பிரசாத் கூறினார்.
2013ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது அவர் வெளிச்சத்திற்கு வந்தார். அதே போல் 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி ஒரு நட்சத்திர வீரராக மாறினார்.
2014இல் இங்கிலாந்து தொடரின் போது கேப்டன் எம்.எஸ். தோனிக்கு பேக்-அப்பாக இந்திய அணியில் இடம் பிடித்தார், ஆனால் அந்த தொடரில் அவர் இந்திய அணிக்காக அறிமுகம் ஆக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 2015இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணிக்கு ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடினார்.
இந்த ரஞ்சி டிராபி சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 561 ரன் அடித்திருக்கிறார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் 10வது சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சதமும் அடித்தார். இதனால், இந்த இலங்கை தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தால், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும். தென்னாபிரிக்கா தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்தால், அவர் யார் என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.