இரண்டு வருடம் ஐ.பி.எல் தொடரில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 கிரிக்கெட் தொடரின் கிங் மேக்கராக திகழ்ந்த தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த 2015ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
சென்னை அணி மீதான இரண்டாண்டு தடை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த தொடரில் பங்கேற்க சென்னை அணிக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் சென்னை அணியின் ரீ எண்ட்ரீ குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையுமான அஸ்வின் “நாங்கள் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தமிழக மக்களுக்கு சென்னை அணி மிக நெருக்கமானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சென்னை அணிக்கு பெரும் ரசிகர் படை இருப்பதால் சென்னை அணிக்கு வரும் தொடரில் நல்ல வரவேற்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இலங்கைக்கு சென்று டெஸ்ட், ஒருநாள், டி20 என நீண்ட தொடரில் விளையாடவுள்ளார். ஆனால்,இந்திய அணியின் புது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை. இந்த தொடரில் அவரது புது பந்துவீச்சை தொடருவார் என தெரிகிறது.