புஜாராவின் பவுலிங்கை கிண்டலடித்த அஸ்வின், பதிலுக்கு அஸ்வின் பாணியிலேயே நக்கலடித்தார் புஜாரா. ட்விட்டரில் இந்த கலகலப்பு அரங்கேறியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் பல ரசிகரமான சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஐந்தாம் நாள் வரை சென்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வந்தது. ஆரம்பத்தில் சில மணிநேரம் இந்திய அணி முனைப்புடன் பந்துவீசியது. ஆஸி., அணி விக்கெட் இழக்காமல் விளையாடியதால், போட்டி டிராவை நோக்கி சென்றது.
ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய 20 ஓவர்கள் மீதமிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சுப்மன் கில், புஜாரா ஆகியோருக்கு ஓவர்களை கொடுத்தார் ரோகித் சர்மா. பின்னர் இரு அணி கேப்டன்களும் சமரசம் செய்து கிட்டத்தட்ட 15 ஓவர்கள் மீதமிருக்கும்போது போட்டியை முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் புஜாரா பவுலிங் வீசியதை ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டலடித்திருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது: “நான் இப்போது என்ன செய்யட்டும்? பவுலிங் வேலையைவிட்டு போய்விடவா?” என ஹிந்தியில் பதிவிட்டிருந்தார். அஸ்வின் இப்படி நக்கல் பாணியில் கிண்டலடிப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
அஸ்வினின் இந்த கிண்டலுக்கு அவரது பாணியிலேயே பதில் கொடுத்திருக்கிறார் புஜாரா. “நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் போன பிறகு நீ பேட்டிங் செய்தாய் அல்லவா, அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக நான் இந்த பவுலிங் செய்தேன்.” என்று ட்விட்டரில் பதில் கிண்டல் செய்தார்.
நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனபிறகு, இந்திய அணி நாள் முடியும் தருவாயில் களமிறங்கியது. ஓரிரு ஓவர்கள் மீதமிருக்கும் நேரத்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். வழக்கமாக ஒரு விக்கெட் போனபிறகு புஜாரா உள்ளே வருவார். ஆனால் அன்று நாள் முடிவதற்கு இன்னும் சில ஓவர்களே இருந்ததால், நைட் வாட்ச்மேனாக அஸ்வின் களமிறங்கினார். சிறப்பாகவும் விளையாடினார். இந்த நிகழ்வை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருக்கிறார் புஜாரா.
Nahi. This was just to say thank you for going 1 down in Nagpur 😂 https://t.co/VbE92u6SXz
— Cheteshwar Pujara (@cheteshwar1) March 13, 2023