மும்பை: இந்திய கேப்டன் கோலையை விட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூடுதலாக சம்பளம் வாங்கும் விஷயம் தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர் சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பின் இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களில் இந்திய பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி தான் அதிக சம்பளம் வாங்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இவரின் ஒரு ஆண்டு சம்பளம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியை விட அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் ஒரு ஆண்டுக்கு ரூ. 7 கோடியே 61 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அதே நேரத்தில் இந்திய கேப்டன் கோலி ரூ. 6 கோடியே 50 லட்சம் வாங்குகிறார். சாஸ்திரிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேன் (ரூ.3 கோடியே 57 லட்சம்) அதிக சம்பளம் வாங்குகிறார்.
இதே போல அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (ரூ 9 கோடியே 50 லட்சம்) உள்ளார். இதில் கோலி இரண்டாவது இடத்தில் (ரூ 6 கோடியே 50 லட்சம்) உள்ளார். இருந்தாலும் விளம்பர ஒப்பந்தம் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் கோலியே முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார்.