ஹர்பஜன், கும்ப்ளே இல்லை… இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்; முன்னாள் வீரர் புகழாரம்!
இந்திய அணியில் இவர்தான் சிறந்த ஆப்-ஸ்பின்னர் என இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினை புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, 2010ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் அறிமுகமான அஸ்வின், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்த ஒரே ஆண்டில் டெஸ்ட் அணியிலும் இடம்பெற்று தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்.
பந்துவீச்சு மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி வந்த அஸ்வின், ஆல்ரவுண்டர் களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நீடித்து வந்தார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஜடேஜா உடன் இணைந்து பல சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி இருந்தாலும், சஹல் மற்றும் குல்தீப் சுழல் ஜோடி வருகைக்குப் பிறகு அஸ்வினுக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடமில்லாமல் போனது.
கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் அஸ்வின் ஆடவில்லை. இருப்பினும் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இருந்துவருகிறார். இந்திய வீரர்கள் மத்தியில் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அஸ்வின் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அஸ்வின் இந்திய துணைக்கண்டத்தின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என புகழாரம் சூட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் சுவான்.

அவர் கூறுகையில், “இந்திய துணைக்கண்டம் மைதானங்களை பொறுத்தவரை, தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மட்டுமே. ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் ஒரு சில போட்டிகளில் நன்கு செயல்பட்டு இருந்தாலும் அவரால் அஸ்வினுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய துணைக்கண்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு இரண்டிலும் திணறுகின்றனர்.
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது லிமிடெட் ஒவர் போட்டிகளிலும் இந்திய துணைக்கண்டத்தில் நான்கு செயல்பட்டிருக்கிறார்.” என அவர் குறிப்பிட்டார்