இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ரவீந்திர ஜடேஜா, இன்றைய போட்டியில் பந்து வீசியது பற்றி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். ஷமி 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் தட்டுத்தடுமாறி அக்ஸர் பட்டேல், அஸ்வின் உதவியால் 262 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒரு ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய ஸ்பின்னர்களின் மாயாஜால சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தனது இரண்டாவது விக்கெட்டை 65 ரன்களுக்கு இழந்தாலும், பின்னர் வரிசையாக 95 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில் ஆஸி., அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 114 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது. பந்துவீச்சில் மிரட்டிய ஜடேஜா 42 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது முறையாக 7 விக்கெட்டுகள் எடுக்கிறார். இதுதான் சிறந்த பந்துவீச்சாகவும் இருக்கிறது. அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
115 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 1 ரன், கேப்டன் ரோகித் சர்மா 31 ரன்கள், கோஹ்லி 20 ரன்கள் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் அடித்து அவுட்டாகினர். இறுதிவரை களத்தில் நின்ற புஜாரா (31) மற்றும் கே எஸ் பாரத் (23) இருவரும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியை வென்றது. 7 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஜடேஜா கூறுகையில், “இந்த மைதானத்தில் எனது பந்துவீச்சை நன்றாக என்ஜாய் செய்தேன். எனது பந்துவீச்சிற்கு சாதகமாக இந்த பிட்ச் இருந்தது. சில நேரங்களில் டர்ன் ஆகிறது. சில நேரங்களில் மிகவும் கீழே செல்கிறது. பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார்கள் என்று தெரியும். ஆகையால் பந்துகளை நேராக வீச வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். வேறு திட்டமே என்னிடம் இல்லை.
அதேபோல் அவர்கள் நிறைய ரன்கள் அடிக்கும் முனைப்பிலும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு ஸ்டம்பை குறிவைத்து மட்டுமே வீசினேன். அவர்கள் தவறு செய்தால் எனக்கு அது சாதகமாக முடியும் என்று எண்ணினேன். நடந்துவிட்டது. இந்த பிட்ச்சில் ஸ்வீப் அடிப்பது மோசமான முடிவு என்று எனக்கு நன்றாகவே தெரியும்.” என்று இறுதியாக சிரித்தபடியே நகர்ந்தார் ஜடேஜா.