நடந்தது எல்லாம் நடந்திருச்சு… இனி பாருங்க… எல்லா மேட்சும் இனி செமி பைனல் தான்; எச்சரிக்கும் பெங்களூர் அணியின் பயிற்சியாளர்
எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளையும் அரையிறுதி போட்டியை போன்று கருதி பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என பெங்களூர் அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூர் அணி, சென்னை அணியிடம் தோல்வியடைந்து, தோல்வியுடன் தொடரை துவங்கியது.
இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டியில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் உள்ளிட்ட அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டது.
கடந்த தொடர்களை போலவே இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருவது பெங்களூர் ரசிகர்களுக்கே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதால், பெங்களூர் அணியை ஐபிஎல் தொடரில் இருந்தே கலைத்துவிடலாம் என பெங்களூர் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாது என எதிர்பார்க்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளை பெங்களூர் அணி கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ளும் என பெங்களூர் அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூர் அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் பேசுகையில், “ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி சவால் நிறைந்ததாக இருந்தது. ஹைதராபாத் அணி முழு பலத்துடன் எங்களை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. எங்கள் இடத்திலேயே நாங்கள் தோல்வியை சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது. நாங்கள் இந்த தோல்விகளில் இருந்து முழு பலத்துடன் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளை அரையிறுதி போட்டிகளை போன்று அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவோம். இனி வரும் போட்டிகள் அனைத்தும் எங்களுக்கு அரையிறுதி போட்டிகளை போன்றது” என்று தெரிவித்தார்.
பெங்களூர் அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் கொல்கத்தா, ஹைதராபாத், குஜராத் உள்ளிட்ட வலுவான அணிகளை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.