தம்பி ரோஹித்து ஒழுங்கா நான் சொல்லுறத கேளு..உனக்கு ஓபனிங் பேட்டிங் செட் ஆகாது இத மட்டும் செய் ; ரோஹித் சர்மாவுக்கு ஐடியா கொடுத்த அனில் கும்ப்ளே..
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற வரிசையில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக பல ஆண்டுகள் துவக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 க்கு பிறகு தான் ரெகுலர் துவக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.அதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் அல்லது நம்பர் 3 பேட்டிங்கில் பலமுறை விளையாடி மும்பை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருப்பதால் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக்கூடிய அனுபவமான ஒரு பேட்ஸ்மேன் நிச்சயம் தேவை என்ற நிலையில் மும்பை எண்ணி தவித்து வருகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவே மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யலாம் என்று முன்னாள் வீரர்கள் சிலர் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே., மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் அப்பொழுதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாக இருக்கும் என்றும் அறிவுரை கொடுத்துள்ளார்.
அதில்,“தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியில் நிச்சயம் அனுபவம் வாய்ந்த மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் தேவை. மும்பை இந்தியன்ஸ் அணியில் சில அற்புதமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், ஆனால் என்னை பொருத்தவரையில் ரோஹித் சர்மா போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் மிடிலாடரில் பேட்டிங் செய்தால் நிச்சயம் ஏழு முதல் 15 ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிலைமையை தனது அணிக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்றும் ரோஹித் சர்மா குறித்து அணில் கும்ப்ளே தெரிவித்திருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் டிம் டேவிட், கேமரூன் கிரீன்,டேவால்ட் பிரேவிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை என்பதால் அனில் கும்ப்ளே இப்படி ஒரு யோசனையை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.