அடுத்து ஒருநாள் போட்டியில் வார்னரின் இடத்தில் நான் துவக்க வீரராக இறங்க தயார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுச்சனே தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்த வார்னர் முதல் போட்டியில் 69 ரன்களும் இரண்டாவது போட்டியில் 83 ரன்களும் அடித்திருந்தார்.
இன்னிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரென தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக திடீரென கீழே விழுந்தார். உடற்பயிற்சி நிபுணர்கள் உள்ளே வந்து வார்னரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதன் பிறகு நேரடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவருக்கு ஸ்கேனிங் நடைபெற்றது. அப்போது அவருக்கு காயம் தீவிரமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளிலும் அவர் இடம்பெற மாட்டார் என கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் குணமடைவார் என்பதே சந்தேகம் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களின் காயம் குறித்து பேசிய இளம் வீரர் லபுச்சனே, அவரது இடத்தில் தான் துவக்க வீரராக களமிறங்க தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
“ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு வெற்றியிலும் வார்னர் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவர் காயம் காரணமாக வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவை தந்திருந்தாலும் தொடரை கைப்பற்றி விட்டதால் அவரது இடத்தில் மற்றொரு வீரரை ஆடவைத்து பரிசோதித்துப் பார்க்க இது நல்ல வாய்ப்பாக அமையும். நிர்வாகம் என்னை துவக்க வீரராக களம் இறங்கச் செய்தால் நான் எந்தவித தயக்கமுமின்றி களமிறங்குவேன். எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.
அதேபோல ஜோ பர்ன்ஸ் நல்ல துவக்க வீரர். டெஸ்ட் போட்டிகளில் 40க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். 4 சதங்கள் விளாசி இருக்கிறார். அதனால் அவரும் இந்த இடத்திற்கு தகுதியானவர் தான். அவர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்றாலும் கடந்த முறை நடந்த பாக்., அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி 99 ரன்கள் அடித்தார். அதிக ரன்களை எளிதில் அடிக்கக் கூடியவர். அதனால் அவரை எடுத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி துவங்க உள்ளது.