நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் ஜனவரி 5 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்திருந்தது, நியூசிலாந்து அணிக்காக கான்வே(107), யங் (52) ரன்களை அதிகபட்சமாக அடித்திருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி 10 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் அடித்தது, பங்களாதேஷ் அணி சார்பில் ஜாய் (78), சாண்டோ (64), ஹக் (88),டாஸ்(86), ஹசன் (46) ரன்கள் அடித்து பங்களாதேஷ் அணிக்கு ஒரு இமாலய ரன்களை அடித்து குவித்தனர்.
இதனால் பங்களாதேஷ் அணி 120 ரன்கள் முன்னிலை வகித்தது, பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இதனால் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

2016 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியை தழுவாமால் விளையாடி வந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஷ் அணி வெற்றி குறித்தும் நியூசிலாந்து அணியின் பரிதாப தோல்வி குறித்தும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பங்களாதேஷ் அணியின் வெற்றி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,”நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றி பங்களாதேஷ் அணியின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்டது, நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்று சாதனை படைத்தது போல் பங்களாதேஷ் அணி பல சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது, வருங்காலங்களில் இதுபோன்ற சாதனைகளை இன்னும் அதிகமாக பங்களாதேஷ் அணி படைக்கும். இருந்தபோதும் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் பொழுது இடையில் மோசமாக விளையாடி நம்மளை ஏமாற்றி விடும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய பங்களாதேஷ் அணி நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியது நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது பங்களாதேஷ் அணி போன்ற ஒரு அணி வெற்றி பெற்றது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் கிரிக்கெட் வளர்ந்து வருவதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்,”என்று மெக்கலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.