பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து தனது யூடியூப் சேனலில் பாராட்டிப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தற்போது வர்ணனையாளராகவும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சோயப் அக்தர் ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தில் இரண்டுமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது பந்துவீசு வேகத்திற்காக “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று போற்றப்படுகிறார்.
இவர் 14 முறை 5 விக்கெட்களையும் இரண்டு முறை பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்று தந்துள்ளார். மேலும் இவர் தனது பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார். சோயப் அக்தர் மைதானத்தின் காற்றின் திசைக்கு ஏற்ப பந்துவீசும் திறமை கொண்டவர்.

இந்நிலையில் சோயப் அக்தர் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து தனது யூடியூப் சேனலில் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “ தற்போது கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான மற்றும் புத்திசாலித்தனமான பவுலர் யார் என்றால் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவைதான் நான் கூறுவேன். ஏனென்றால் பும்ரா காற்றின் திசை, வேகம் ஆகியவற்றை கணித்து பந்துவீசுகிறார். இவ்வாறு சூழ்நிலைக்கேற்ப பந்து வீசும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான்.

நான், வாசிம், வாக்கர் ஆகியோர் காற்றின் திசை மற்றும் வேகம் கணித்து செயல்படக்கூடியவர்கள். எங்களுக்கு மெக்கானிக்ஸ் மற்றும் ஏரோ டைனமிக்ஸ் குறித்து தெரியும். அதேபோல் எந்த நேரத்தில் பந்து எவ்வளவு ஸ்விங் ஆகும் என்பது குறித்து எங்களுக்கு தெரியும். பும்ராவுக்கும் இதெல்லாம் தெரியும் என்று நான் நினைக்கிறேன். 7 ஸ்டெப்தான் தான் ஓடி வருகிறார். 5 விநாடிகளில் பேட்ஸ்மேன்களை திணற வைக்கிறார்.

அதுமட்டுமின்றி அதே 5 விநாடிகளில் எவ்வாறு பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது என்பதை திட்டமிடுகிறார். ஓவர் த விக்கெட்டில் வரும்போது பும்ரா கிரீஸை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்.4வது மற்றும் 3வது ஸ்டெம்பில் வீசுகிறார். தூக்கத்திலிருந்து எழுப்பி பந்தை வீச சொன்னாலும் கூட அதே இடத்தில் பந்தை பிட்ச் செய்வார்” என்று சோயப் அக்தர் தனது யூடியூப் சேனல் மூலம் பேசியுள்ளார்.