பும்ராவின் இடத்தை நிரப்ப யாருக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தனது நட்சத்திர வீரர்களை காயம் காரணமாக இழந்து வருகிறது. முன்பு ஜடேஜா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இடம் பெறவில்லை. தற்போது பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து விலகி இருக்கிறார்.
பும்ராவிற்கு மாற்று வீரராக யாரை எடுப்பது? என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரிசர்வ் வரிசையில் இருக்கும் முகமது சமி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான டி20 தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு இவரால் விளையாட முடியாமல் போனது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்னர் உரிய நேரத்தில் குணமடையவில்லை என்பதால் அதிலும் சேர்க்கப்படவில்லை. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இவர் உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியும்.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட முகமது சிராஜ் டி20 உலக கோப்பை தொடரில் எடுக்கப்படுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவர் ரிசர்வ் வரிசையிலும் இல்லை.
முகமது சமி இல்லையென்றால் அதற்கு அடுத்ததாக ரிசர்வ் வரிசையில் இருப்பவர் தீபக் சஹர். இவர் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் இடம் பெற்று நன்றாக செயல்பட்டார். இவரும் பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கு முக்கிய வீரராக தெரிகிறார்.
தென்னாப்பிரிக்காவுடன் கடைசி டி20 போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்ற பிறகு யார் பும்ராவிற்கு மாற்று வீரர் என்று முடிவு செய்யப்படும் என கூறினார்.